மீண்டும் பற்றி எரியும் நேபாளம்: பதவி விலகினார் பிரதமர் சர்மா ஒலி
மீண்டும் பற்றி எரியும் நேபாளம்: பதவி விலகினார் பிரதமர் சர்மா ஒலி
UPDATED : செப் 09, 2025 02:26 PM
ADDED : செப் 09, 2025 12:55 PM

காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு உள்ள போராட்டக்காரர்கள், அதிபர் இல்லத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். பார்லிமென்ட்டுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
நேபாள நாட்டில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொங்கி எழுந்த இளைய சமுதாயத்தினர் பெரும் போராட்டத்தில் இறங்கினர். போராட்டக் காரர்களை கட்டுப்படுத்த களம் இறங்கிய அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டம் நாடு முழுவதும் பரவிய சூழலில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு விலக்கி கொண்டது. ஆனாலும் கோபம் தணியாத இளைஞர்கள் மீண்டும் இன்றும் போராட்டம், வன்முறையில் களம் இறங்கி உள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் நேபாளம் நாடெங்கும் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர்வளத்துறை அமைச்சர் யாதவ் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர்.
பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் விடுத்த வேண்டுகோளை பிரதமர் சர்மா ஒலி நிராகரித்தார். இதையடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் ராம் சந்திரி பவுடெல் இல்லத்தை சூறையாடி இருக்கின்றனர். ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தாஹல் என்னும் பிரசந்தா மற்றும் ஷேர் பகதூர் டியுபா, எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோர் இல்லங்களும் போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. அமைச்சர்கள் பலரும், ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படுகின்றனர். பார்லிமென்ட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
நாட்டின் பல பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் சர்மா ஒலி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
துபாய் செல்கிறாரா பிரதமர்?
நிலைமையை சமாளிக்க முடியாமல் இருக்கும் பிரதமர் சர்மா ஒலி, இன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது. உடல் நலம் குன்றி இருக்கும் அவர் சிகிச்சைக்காக துபாய் செல்ல இருப்பதாகவும், அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.