வெள்ளத்தில் மாயமான குடும்பத்தினர்... கனத்த இதயத்துடன் இறுதிச்சடங்குகளை செய்யும் நேபாள மக்கள்
வெள்ளத்தில் மாயமான குடும்பத்தினர்... கனத்த இதயத்துடன் இறுதிச்சடங்குகளை செய்யும் நேபாள மக்கள்
ADDED : செப் 03, 2026 09:42 AM

காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் ஏராளமானோர் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் உயிரிழந்ததாகக் கருதி குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தை தாக்கிய பெரு வெள்ளத்தில் சிக்கி, இதுவரையில், 1250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 320க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 39 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பேரை தேடும் பணி நடந்து வருவதாக நேபாள நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
ரசுவா போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்களை சின்னாபின்னமாக்கிய இந்த வெள்ளத்தினால், பொதுமக்கள் சேறுக்கு அடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மோப்ப நாய் உதவியுடன் ராணுவத்தினர் கண்டு பிடிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்பட்டு வருகின்றனர். அண்மையில் ஒரே வீட்டில் 24 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் ஏராளமானோர் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் உயிரிழந்ததாகக் கருதி, குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் திரிசூலி ஆற்றின் கரையோரத்தில் ஹிந்து முறைப்படி, காணாமல் போனவர்களுக்காக, பிண்டம் உருவாக்கி, மந்திரங்களைச் சொல்லி, இறுதிச்சடங்குகளை செய்தனர்.
