வங்கதேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் இடமில்லை: மத்திய அரசு
வங்கதேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் இடமில்லை: மத்திய அரசு
ADDED : டிச 14, 2025 07:34 PM

புதுடில்லி: இந்தியாவில் இருந்து கொண்டு வங்கதேசத்தின் நலனுக்கு எதிராக செயல்பட அனுமதிக்க மாட்டோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். வரும் 2026 பிப்.,12ல் அங்கு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என வங்கதேச தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தடை காரணமாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.
தேர்தல் தொடர்பாக அவாமி லீக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அவர்களால் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்த முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக வங்கதேசத்துக்கான இந்திய பிரணாய் வர்மாவுக்கு சம்மன் அனுப்பிய வங்கதேச அரசு, ஷேக் ஹசீனா இந்திய மண்ணில் இருந்து கொண்டு அவதூறான கருத்துகள் வெளியிடுவதற்கு கவலை தெரிவித்து இருந்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தின் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. வங்கதேசத்தில் அமைதியான முறையில் பொதுத்தேர்தலானது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதற்கு ஆதரவு அளிக்கிறது.
நட்பு நாடான வங்கதேச மக்களின் நலனுக்கு எதிராக நடவடிக்கைகளுக்கு தனது நிலப்பரப்பை பயன்படுத்த இந்தியா ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. அமைதியான முறையில் தேர்தலை நடத்தவதற்கு. உள்நாட்டு சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

