தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் உருவானது புது குழப்பம்!: சிராக் தொகுதிகளை தட்டிப் பறித்த நிதிஷ்
தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் உருவானது புது குழப்பம்!: சிராக் தொகுதிகளை தட்டிப் பறித்த நிதிஷ்
ADDED : அக் 15, 2025 11:59 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் எதிர்பார்த்து இருந்த, ஐந்து தொகுதிகளுக்கும் சேர்த்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தன் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு வரும் நவ.,6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ.,14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தொகுதி பங்கீடு குறித்த பேச்சில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தீவிரம் காட்டி வந்தன.
அறிவிப்பு
இறுதிக்கட்ட பேச்சுகள் சுமுகமாக முடிந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலா 101 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
அதே போல், கூட்டணி கட்சிகளான சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 29 இடங்களும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யான உபேந்திர குஷ்வஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இதனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டிருந்த குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், சிறிய கட்சி தலைவர்களான ஜிதன் ராம் மஞ்சியும், உபேந்திர குஷ்வஹாவும் தங்களுக்கு மிக குறைந்த அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அதிருப்தி தெரிவித்தனர்.
இதனால், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் பா.ஜ., மேலிட தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் நேற்று தன் கட்சி சார்பில், 57 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில் சிராக் பஸ்வான் கோரியிருந்த ஐந்து தொகுதிகளுக்கும் சேர்த்து அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பதால், தே.ஜ., கூட்டணிக்குள் தற்போது மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஓட்டு வங்கி
பீஹாரில் உள்ள மோர்வா, சோன்பார்ஸா, ராஜ்கிர், காய்காட் மற்றும் மைதானி ஆகிய ஐந்து தொகுதிகள் மீது சிராக் பஸ்வான் கண் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2020 தேர்தலில் மோர்வா மற்றும் காய்காட்டில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ராஜ்கிர் மற்றும் சோன்பார்ஸாவை கைப்பற்றியது.
சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி மைதினி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தவிர, அத்தொகுதியின் எம்.எல்.ஏ., வெற்றிக்குப் பின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தாவிவிட்டார்.
இதனால், தன் ஓட்டு வங்கியை தற்காத்துக் கொள்ள அந்த ஐந்து தொகுதிகளிலும், தன் கட்சி வேட்பாளர்களையே நிறுத்த முடிவு செய்து, நிதிஷ் குமார் இந்த பட்டியலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், தற்போதைய அமைச்சர்கள் ஐந்து பேரின் பெயரும் இடம் பெற்றுள்ளன. புதுமுகங்கள் 30 பேருக்கும், நான்கு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளன.