புதிய காற்றழுத்த தாழ்வு: 16 மாவட்டங்களில் இன்று மழை
புதிய காற்றழுத்த தாழ்வு: 16 மாவட்டங்களில் இன்று மழை
ADDED : நவ 23, 2025 06:17 AM

சென்னை: 'தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில், 16 மாவட்டங்களில், இன்று மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ., மழை பெய்தது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மேலும் வலுப்பெறக்கூடும்.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலுார், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யும்.
இதேபோல், நாளை முதல் 28ம் தேதி வரை, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

