கோவில் நிலம் விற்பனை குத்தகைக்கு புதிய விதிகள்
கோவில் நிலம் விற்பனை குத்தகைக்கு புதிய விதிகள்
ADDED : டிச 09, 2025 05:30 AM

சென்னை: கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை அல்லது அடமானம் ஆகியவற்றுக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஒரு தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலத்தை மீட்க, ஹிந்து சமய அறநிலையத் துறை முயற்சித்தபோது, அந்த கல்லுாரி நிர்வாகம் மாற்று நிலத்தை கொடுக்க முன்வந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களை பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து, கேள்வி எழுப்பியது.
இதன் அடிப்படையில், தமிழக அரசு கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை, அடமானம் ஆகியவற்றுக்கான விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:
கோவில் நிலங்களை விற்பனை செய்வதாக இருந்தால், வழிகாட்டி மதிப்பு அல்லது சந்தை மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ, அதை அடிப்படை மதிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்
கோவில் நிலங்களுக்கு ஈடாக வேறு நிலத்தை கொடுக்க முன்வருவோர் தேர்வு செய்யும் நிலம், எந்தவித வில்லங்கம், வழக்கு, ஆக்கிரமிப்பு பிரச்னை இல்லாததாக இருக்க வேண்டும்
திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தின் பகுதியாக உள்ள நிலத்தை ஏற்க கூடாது. சாலைகள் அமைப்பதற்கான நிலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நிலம், யானை, புலிகள் வழித்தடம், மலைப்பகுதி பாதுகாப்பு குழும பகுதி நிலமாக இருக்க கூடாது
இதில் பரிமாற்றத்தில் கொடுக்கப்படும் மாற்று நிலத்தின் மதிப்பு, கோவில் நிலத்தின் மதிப்புக்கு கூடுதலாக இருக்க வேண்டும். மதிப்பு குறைவான நிலம் பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்டால், வேறுபாட்டு தொகையை கோவில் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும்
கோவில் நிலங்களை குத்தகை அல்லது அடமானம் வைக்கும் நிலையில், அதற்கான காலம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செல்லக்கூடாது
இதற்கான நடைமுறைகள் துவங்கும் முன், அது குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு மக்கள் கருத்து தெரிவிக்க, 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.
இதற்கான அறிவிக்கையை, அறநிலையத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில், பொது மக்கள் பார்வையில் படும் இடங்களில் ஒட்ட வேண்டும். இவ்வாறு புதிய விதிகளில் கூறப்பட்டு உள்ளது.

