விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்
விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்
ADDED : அக் 31, 2025 10:40 AM

சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், விமானங்கள் தரை இறங்குவதற்கு பல ஆயிரம் அடி நீளம் கொண்ட நீண்ட ஓடுபாதைகள் தேவையாக உள்ளன. ஓடுபாதை நீளம் அதிகமாக இருந்தால் மட்டுமே, பெரிய அளவிலான விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் முடியும். இதனால் இடப் பற்றாக்குறையுள்ள நகரங்களில் விமான நிலையம் அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதை உருவாக்கிய சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர்  கூறியதாவது:
நாங்கள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விமானம் நின்ற இடத்தில் இருந்தே செங்குத்தாக மேலே எழும்பி பறக்க முடியும். முன்னோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இறங்கும்போதும், அதுபோலவே செங்குத்தாக இறங்கி விட முடியும்.
விமானம் தரையிறங்க நீண்ட ஓடுபாதைகள் தேவையில்லை. பெரிய விமான நிலையங்களை அமைக்க முடியாத கரடுமுரடான நிலப்பரப்புகளில் கூட இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.
பல்வேறு இடங்களுக்கு விமான போக்குவரத்து சேவை சென்று அடைய முடியும். இந்த தொழில்நுட்பம் ராணுவ போக்குவரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஹைப்ரிட் ராக்கெட்  உந்துவிசையைப் பயன்படுத்தி, விமானத்தை செங்குத்தாக உயரே செலுத்தவும், மென்மையாக தரையிறக்கவும் முடியும். தொலைதூரப் பகுதிகளுக்கும் விமானங்கள் சென்று வருவதில் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக சோதனை செய்து காட்டியுள்ளனர். அவர்களது ஆராய்சிக்கட்டுரை, விமானப் போக்குவரத்து தொடர்பான உலகின் முன்னணி ஆய்விதழிலும் வெளியாகி உள்ளது.

