இரவு நேர மின் தடைக்கு மின் சாதன பழுதே காரணம்: வாரியம் விளக்கம்
இரவு நேர மின் தடைக்கு மின் சாதன பழுதே காரணம்: வாரியம் விளக்கம்
ADDED : மே 24, 2026 01:35 AM

சென்னை: 'இரவில் அதிக மின் சுமை ஏற்படுவதால், மின் கேபிள், டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக, மின் தடை ஏற்படுகிறது' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், பல இடங்களில் சில தினங்களாக மின் சாதன பழுதால் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேல்நிலை கம்பி இதுகுறித்து, மின் வாரி யம் அளித்துள்ள விளக்கம்:
சமீப காலமாக, தமிழக மின் தேவை தினமும், 20,000 மெகா வாட்டிற்கு கீழ் குறைவாகவே இருப்பதால், சிரமமின்றி பூர்த்தி செய்யப்படுகிறது. மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், கட்டுப்பாட்டு மையங்கள், நுகர்வோருக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்கின்றன.
சென்னை மண்டலத்தில், 38.79 லட்சம் நுகர்வோருக்கு, 253 துணை மின் நிலையங்கள், 40,798 டிரான்ஸ்பார்மர், 16,582 கி.மீ., கேபிள், 18,092 கி.மீ., மேல்நிலை கம்பிகள் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
எனினும், சில பகுதிகளில் மின் வினியோக நிலையங்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது காரணமாக, மின் தடை ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, மின் பயன்பாட்டில் உச்ச நேரமான இரவு நேரத்தில், அதிக மின் சுமை காரணமாக மின் சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இப்பிரச்னைகளை உடனே சரிசெய்ய, அனைத்து மின் வினியோக வட்டாரங்களிலும், நடமாடும் பராமரிப்பு குழு, தொழில்நுட்ப குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நடவடிக்கை மேலும், 24 மணி நேர கண்காணிப்புக்கும், மின் வினியோக சீரமைப்புக்கும் கூடுதலாக, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மின்னகம் நுகர்வோர் சேவை மையம், கள அலுவலர்கள், இணையதளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்கள் மீது, உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
