UPDATED : டிச 14, 2025 06:48 PM
ADDED : டிச 14, 2025 05:20 PM

புதுடில்லி: பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பா.ஜ., தேசிய தலைவராக, 2020 பிப்ரவரியில், மத்திய அமைச்சர் நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். லோக்சபா தேர்தலை கருதி, நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தற்போது நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், கட்சியின் புதிய தலைவர் நியமனம் குறித்து சில மாதங்களாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் முடிவில், தேசிய செயல் தலைவராக பீஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இவர்
பீஹாரை சேர்ந்த நிதின் நபின், பாஜ மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன் ஆவார். பங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்குமுறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது பீஹாரில் சாலை கட்டுமானத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
பிரதமர் வாழ்த்து
நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:நிதின் நபின் கடினமான உழைப்பாளி என்பதை நிரூபித்துள்ளார். அவரது அனுபவம் கொண்ட இளம் மற்றும் சுறுசுறுப்பான தலைவர் . பீஹாரில் அமைச்சராகவும்,எம்எல்ஏ ஆகவும் சாதனை படைத்துள்ளார். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அவர் அயராது உழைத்துள்ளார். அவர் தனது பணிவான குணம் மற்றும் எளிமையான செயல் ஆகியவற்றால் அறியப்படுபவர். அவரது ஆற்றலும், அர்ப்பணிப்பும் வரும்காலங்களில் பாஜவை வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். பாஜவின் செயல்தலைவராக பொறுப்பேற்கும் அவுருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நிதின் நபினுக்கு நிதின் கட்காரி உள்ளிட்ட பாஜ மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

