கில்லுக்கு கல்தா... சஞ்சு சாம்சனுக்கு இடம்; டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
கில்லுக்கு கல்தா... சஞ்சு சாம்சனுக்கு இடம்; டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
ADDED : டிச 20, 2025 03:01 PM

மும்பை: அடுத்தாண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியும், விவாதமும் எழுந்தது. இதையடுத்து, நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் கில் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் எதிர்பார்த்ததைப் போலவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20) அறிவிக்கப்பட்டது.
கில் மற்றும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் அணியில் இடம்பிடித்துள்ளனர். சஞ்சு சாம்சனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், அக்ஷர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரானா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.

