இனி நோயாளி இல்லை: மருத்துவ பயனாளர்கள் என அழைக்க புதிய உத்தரவு
இனி நோயாளி இல்லை: மருத்துவ பயனாளர்கள் என அழைக்க புதிய உத்தரவு
ADDED : அக் 07, 2025 01:18 PM

சென்னை: மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை, இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் என அழைக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களை இனிமேல் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவ பயனாளிகள்' அல்லது 'மருத்துவப் பயனாளர்கள்' என அழைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவப் பயனாளிகள்' என குறிப்பிடப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், “நோயாளி” என்ற சொல்லுக்கு பதிலாக “பயனாளி” என குறிப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.