வெளிநாடுகளின் அழுத்தம் இல்லை: யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசு மறுப்பு
வெளிநாடுகளின் அழுத்தம் இல்லை: யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசு மறுப்பு
ADDED : செப் 16, 2026 05:27 PM

புதுடில்லி: யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், இந்தியாவுக்கு வெளியில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதன்படி, '2,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் நிறுவனங்கள், 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பரிவர்த்தனை, 75 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் கட்டணம் 300 ரூபாய் என்ற வரம்புக்குள் இருக்கும். ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் ஆகிய அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைக்கு ஒரே கட்டணமாக 5 ரூபாயும், பங்குச்சந்தை வணிகத்துக்கான யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு 0.02 சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வெளிநாடுகளின் அழுத்தமே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்டவை குற்றம்சாட்டி இருந்தன. கார்டு ( கிரெடிட் / டெபிட் கார்டு) சேவை வழங்கும் நிறுவனங்களின் பலன் பெறவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெளியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக யுபிஐ பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இது தவறானது. தன்னிறைவு பெற்ற, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் கட்டுப்படியாகக்கூடிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சூழலமைப்பை உருவாக்கும் தெளிவான குறிக்கோளுடன், இந்தியாவின் யுபிஐ கொள்கை முடிவுகள் சுதந்திரமாக எடுக்கப்படுகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
