தண்ணீர் இல்லை, போலீஸ் பாதுகாப்பில்லை: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுமக்கள் பேட்டி
தண்ணீர் இல்லை, போலீஸ் பாதுகாப்பில்லை: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுமக்கள் பேட்டி
UPDATED : செப் 29, 2025 07:26 AM
ADDED : செப் 28, 2025 12:45 PM

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம் போதுமான போலீஸ் பாதுகாப்பு, குடி தண்ணீர் ஏதும் போதுமான அளவு ஏற்பாடு செய்யவில்லை என கரூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூர்:கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன் கூறியதாவது:
தண்ணீர் இல்லை
முந்தைய நாளில் இபிஎஸ் வந்து இருந்த போது எல்லா இடத்திலும் தண்ணீர் இருந்தது. தண்ணீர் என்கிற பற்றாக்குறையே இல்லை. விஜய் கூட்டத்தில் தண்ணீர் யாருமே ஏற்பாடும் செய்யவில்லை. தண்ணீர் இருந்து இருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.
இரண்டாவது விஜய் கிளம்பி போன பிறகு தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஓட்டு இல்லாத சின்ன சின்ன பசங்கள் தான் நிறைய வந்து இருந்தார்கள். அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார் எவ்வளவோ அடித்து பார்க்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது: ரசிகர்கள் கூட்டம் அதிகம். எங்க மீட்டிங்கோ அங்கே தான் விஜய் பிரசாரம் வாகனத்தில் மேலே ஏற அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணியில் இருந்தே கூட்டம் அதிகம் ஆகிவிட்டது. கரூருக்கு விஜய் 6 மணி ஆகிவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் பேசும் இடத்திற்கு 7.30 மணிக்கு தான் வந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீசார் எங்கே?
கரூர் மக்கள் கூறியதாவது: ஒரு எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ யாராக இருந்தாலும் சரி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. தவறு செய்து விட்டார்கள். குறிப்பிட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தால் இந்த சம்பவமே நடந்து இருக்காது. அதிக கூட்டம் கூடினால் அதற்கு ஏற்ப போலீஸ் வர வேண்டும். 100 பேர் கூடினால் பத்து போலீஸ் வர வேண்டும். 5 லட்சம் பேர் வந்தால் ஆயிரம் போலீசார் வர வேண்டும்.
வெறும் 30 போலீஸ் வைத்து கொண்டு 5 லட்சம் பேரை கண்ட்ரோல் செய்ய முடியுமா? இபிஎஸ் எல்லா இடத்திற்கும் செல்கிறார். அவர் போகும் இடத்தில் ஏதாவது சம்பவம் நடக்கிறதா? மக்கள் கூட்டம் கூடுகின்ற இடத்தில் அரசாங்கம்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் முழு காரணமும் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கரூர் மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
மக்கள் பலி கேடா?
மேலும் கரூர் மக்கள் கூறியதாவது: இவர்கள் செய்யும் அரசியலுக்கு மக்கள் பலி கேடா? சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். இவர்கள் வந்தால் மட்டும் நிறைய போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகிறார்கள். மக்களுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை.முதலில் இந்த சிறிய இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்தார்கள். இது தவறான விஷயம். தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே கேவலம்.
கரூரை வந்து கேவலப்படுத்தி விட்டார்கள். முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லை, காது குத்து கெடா வெட்டுறதுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு தரீங்க, எவ்வளவு மக்கள் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை, இந்த இடுக்கமான இடத்தை ஏன் தந்தீங்க இது அரசாங்கத்தின் தவறு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த பெண் கூறியதாவது; எங்க வீடு இங்கு தான் இருக்கிறது. கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது, விஜய் வாகனத்தை பார்த்ததும், தொண்டர்கள் வேகமாக ஓடி வந்தனர். ஆனால், போலீஸ்காரர்கள் எல்லாம் வண்டியில், ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்கள். சின்ன பசங்கள் எல்லாம் வண்டிகளுக்கு முன்பு பட்டாசுகளை வெடித்தார்கள். அந்த பட்டாசு வெடித்த பசங்களில் ரவி கிருஷ்ணன் என்ற பையன் இறந்து விட்டான்.
நேற்று இந்தத் தகரம் ஜெனரேட்டர் மீது விழுந்துள்ளது. அந்தக் கம்பி பட்டுதான் கரன்ட் அடித்து 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜய் பேசிய 10 நிமிடத்தில் வண்டி அந்தப் பக்கம் பறந்து விட்டது. எங்களுக்கு நடுக்கமாகி விட்டது. மக்கள் வரத் தொடங்கி விட்டனர். நாங்கள் 10 மணிக்கே அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டேன். அதிகாலை 4.30 மணிக்கு தான் வீட்டுக்கு சென்றேன்.
ஏன் இந்த இடத்தில் மீட்டிங் நடத்தினால் மக்கள் எப்படி நிற்பார்கள், விலகுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட தெரியாதா? எத்தனை அரசியல் கட்சி மீட்டிங் நடத்துகிறீர்கள். ஒருத்தராவது, இந்த இடத்தில் மீட்டிங் வைத்தால் கூட்டநெரிசல் ஏற்படும் என்று அறிக்கை விட்டிருக்கிலாமா? யாருமே அதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.
இங்குள்ள மக்களுக்கு தெரியும். சனிக்கிழமை இரவு 7 மணிக்கு இங்கேயும், வெங்கமேட்டுலயும் பயங்கர கூட்டமாக இருக்கும். கொத்தனார் வேலைக்கு போகிறவர்கள் என பல வேலைக்கு போகிறவர்கள் எல்லாரும் இங்கு தான் சம்பளத்தை பிரிப்பார்கள். வெங்காயம் முதல் பூண்டு விற்பவர்கள் வரை அனைத்து வியாபாரிகளும் இங்கு தான் இருப்பார்கள். இவ்வளவு நெரிசலான பகுதியில் நீங்க இவ்வளவு பெரிய மீட்டிங்கை வைக்கிறீர்கள்.
கட்சிக்காக வருகிறார்களா? இல்லையா? என்பது எல்லாம் தெரியாதா? அவர் ஒரு நடிகர் என்பதற்காகவே, குழந்தைகள் எல்லாம் அவரை பார்க்க வருவார்கள். பள்ளி விடுமுறை வேறு. அப்போ, நீங்கள் அதற்கேற்றாற் போல இடத்தை தேர்வு செய்து கொடுத்திருக்கலாமே.
விஜய் வண்டி உடனேயே ஒரு படையும் வருகிறது. ஜெயலலிதா வண்டிக்குள் போகஸ் லைட் வைத்து முகத்தை காண்பித்து கொண்டே வருவார். நீங்க (விஜய்)அப்படியாவது காட்டியிருந்தால், முகத்தை பார்த்து விட்டு மக்கள் அப்படியே போயிருப்பாங்க. ஆனால், அவரு அப்படி ஏதும் காட்டவில்லை. நேராக இங்கு வந்துதான் விஜய் வெளியே வருகிறார்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பிள்ளைகள் ஒரே இடத்தில் எப்படி நின்றிருக்கும். இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம், இவ்வளவு அமைச்சர்கள், போலீசார் வந்தது எதற்கு. இந்த செருப்புக்கும், கிழிந்த கட்சிக் கொடிக்கும் எதுக்கு சார் இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு. நேற்று எல்லாம் என்ன பண்ணீட்டு இருந்தாங்க.
இந்த இடம் மீட்டிங் நடத்த தகுதியான கூட்டமா என்று கரூரில் இருக்கும் போலீஸ்காரங்களுக்கு தெரியாதா? இங்குள்ள மக்கள் 10 பேர் சேர்ந்து மீட்டிங் நடத்தக் கூடாது என்று தடுத்து நிறுத்தி இருக்கலாமே?.
மாணவர்களை கட்டுப்படுத்த முடியாது. டிரான்ஸ்பார்ம் மீது ஏறுகிறார்கள். மரத்தின் மீது ஏறினார்கள். மரம் முறிந்து தகர சீட்டு மீது விழுந்தது. தகர சீட்டு ஜெனரேட்டர் மீது விழுந்தது தான் இந்த உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம். விஜய் வாகனம் வேகமாக கிளம்பியது. அதுக்காகத் தான் போலீசார் அடித்தார்கள்.
இவை அனைத்திற்கும் பொறுப்பு இந்த இடத்திற்கு அனுமதி கொடுத்த ஆளும் (திமுக) கட்சி. அதுக்கப்புறம் இந்த இடம் தகுதியான இடமா? என்பதை தீர்மானிக்காத தவெக. விஜய் சாருக்கு இந்த இடத்தைப் பற்றி தெரியாது. இந்த இடத்தை தேர்வு செய்த தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்றால், அரசியல் கட்சி மீட்டிங்கிற்கு செல்லுங்கள். ஆனால், அதை வாங்க நாம் இருக்க மாட்டோம்.
இன்னமும் செம்மறி ஆட்டு கூட்டம் போல இருந்தால், உண்மையாலுமே நாம் வாழ்வதே வீண். நம்மை ஒரு கிள்ளுக் கீரையாக பயன்படுத்துகிறார்கள் என்பது இந்தக் கூட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பக்கத்து வீட்டு பொண்ணு இங்க வந்து விஜயை பார்க்க வர மாட்டார்களா? சம்பவத்திற்கு யார் மீது குற்றம் என்பதை விட, இந்த அரசு மனிதனை மதிப்பதே இல்லை. எந்த அரசியல் கட்சியும் மதிப்பதில்லை. நாம் பார்த்து திருந்தினால் மட்டுமே உண்டு. திருப்பி அடிக்க வேண்டும். யோசித்து கேள்வி கேட்டு, படித்தவனை, பண்பானவனை உட்கார வைத்து, மக்களை நேசிக்கும் தலைவனை தேர்வு செய்யாத வரைக்கும் நாம் செத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.