அமெரிக்க அதிபர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை: அமெரிக்க அமைச்சர் ரூபியோ தம்பட்டம்
அமெரிக்க அதிபர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை: அமெரிக்க அமைச்சர் ரூபியோ தம்பட்டம்
ADDED : அக் 10, 2025 07:18 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை என காசா போர் அமைதி திட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், காசா போர் அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அதிபர் டிரம்பின் முயற்சிகளை வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ரூபியோ பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்க அதிபரின் ஈடுபாடு இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை.
மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில், டிரம்ப் ஈடுபட்டதால் மட்டுமே இது சாத்தியம். இது உண்மையில் மிகப்பெரிய திருப்பமாக நான் நினைக்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு நினைவில் கொள்ளுங்கள். அப்போது இது சாத்தியம் என்றும் யாரும் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மகத்தான திருப்பு முனை
இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: மத்திய கிழக்கில் ஒரு மகத்தான திருப்பு முனையை அடைந்தோம். இதற்கு ஒரு போது தீர்வு காண முடியாது என மக்கள் கூறிய நிலையில், காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். அங்கு நிலையான அமைதி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எனது பதவிக் காலத்தில் ஏழு போர்களை தீர்த்து வைத்து இருக்கிறேன். நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்க போகிறேன். நான் எகிப்து செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். அங்கு ஒரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையொப்பம் ஏற்பட போகிறது. இவ்வாறு டிரம்ப் பேசினார்.