நெல் கொள்முதல் பணியில் வட மாநில தொழிலாளர்கள்; பிரச்னைக்கு அரசு புதிய தீர்வு
நெல் கொள்முதல் பணியில் வட மாநில தொழிலாளர்கள்; பிரச்னைக்கு அரசு புதிய தீர்வு
ADDED : செப் 25, 2026 05:16 AM

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்களை நியமித்து, ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக தீர்வு காணப்பட்டு உள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்வதற்காக, 401 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் மையங்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திறந்தது. கொள்முதல் நிலையங்களில், முந்தைய தி.மு.க., ஆட்சியில் மூட்டைக்கு 40 ரூபாய் 'கமிஷன்' பெறப்பட்டது. இதை கூலித் தொழிலாளர்கள், கொள்முதல் நிலைய அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
'இந்த ஆட்சியில், நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷன் பெறும் நடவடிக்கை இருக்காது. அவ்வாறு நடந்தால், விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்' என, 'வாட்ஸாப்' எண் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், மூட்டைக்கு 10 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்பதால், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்த கூலித் தொழிலாளர்களும் பணிக்கு வர மறுத்து விட்டனர்.
அதேநேரத்தில், தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது. நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளை அழைத்து, கலெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்களை பணியமர்த்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பல மாவட்டங்களில் திறக்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, கூலித் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
