இனி தனி சின்னத்தில் போட்டி: மனிதநேய மக்கள் கட்சி முடிவு
இனி தனி சின்னத்தில் போட்டி: மனிதநேய மக்கள் கட்சி முடிவு
UPDATED : மே 24, 2026 08:19 PM
ADDED : மே 23, 2026 05:46 AM

சென்னை: 'இனிவரும் தேர்தல்களில், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என, மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற வி.சி.க, முஸ்லிம் லீக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றன. அதேபோல, தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, 'உதயசூரியன்' சின்னத்தில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி பெற்றது.
தனிச்சின்னத்தில் போட்டியிடாத காரணத்தால், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையில் சேர முடியாத நிலை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.
அதில், 'உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், மற்ற கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடாமல், இனிமேல் தனி சின்னத்தில் மட்டுமே மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
