' என்விடியா' சி.இ.ஓ., காதலி உண்மையிலேயே சீன உளவாளியா?: ஆதாரங்கள் கிடைக்காமல் தடுமாறும் அமெரிக்க உளவுத்துறை
' என்விடியா' சி.இ.ஓ., காதலி உண்மையிலேயே சீன உளவாளியா?: ஆதாரங்கள் கிடைக்காமல் தடுமாறும் அமெரிக்க உளவுத்துறை
ADDED : நவ 14, 2026 03:50 AM

வாஷிங்டன்: 'என்விடியா' நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் காதலி உண்மையிலேயே சீன உளவாளிதான் என்பதை உறுதிபடுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் குற்றச்சாட்டை முன்வைக்க அமெரிக்கா தடுமாறி வருகிறது.
உலகளவில் அதிநவீன கம்ப்யூட்டர்களுக்கான, 'சிப்'களை தயாரிப்பதில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான, 'என்விடியா' முன்னிலை வகிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஏ.ஐ-., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், 'என்விடியா'வின் சிப்களை பயன்படுத்துகின்றன. இந்த அதிநவீன ஏ.ஐ., சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த, 'மெகா ஸ்பீடு' என்ற டேட்டா சென்டர் நிறுவனத்தின் நிர்வாகியான அலிஸ் ஹுவாங் உடன், 'என்விடியா'வின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குக்கு வணிக ரீதியிலான தொடர்பு ஏற்பட்டு பின் அது நெருங்கிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, 'என்விடியா'வின் அதிநவீன ஏ.ஐ., சிப்களை அதிகளவில் கொள்முதல் செய்த, 'மெகா ஸ்பீடு' நிறுவனம், அதை சீனாவிற்கு சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், சீனாவுக்கான தகவல்களை சேகரிக்கும் உளவாளியாக அலிஸ் ஹுவாங் செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை குற்றஞ்சாட்டியது. இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு இவர்களது நட்பு குறித்த உளவுத்துறை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அமெரிக்க பார்லி.,யில் இது குறித்த கேள்விகளும், அழுத்தமும் அதிகரித்ததும் இவ்விவகாரம் உடனடியாக வெளியில் வந்தது.
இருவரிடையேயான நட்பு குறித்து, 'என்விடியா' தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதுடன், தன் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஆனால், அலிஸ் ஹுவாங் உளவாளி என்பதை உறுதியாக நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் கிடைக்காமல், உளவுத்துறை திணறி வருவதாகவும், இதனால், அலிஸ் ஹுவாங் சீனாவுக்கு உளவு பார்த்தார் என்பதை நிறுவுவதில் சிக்கல் இருப்பதாகவும், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். 'என்விடியா' நிர்வாகக்குழு சுயமாக நடத்திய விசாரணையில், தேசிய பாதுகாப்புக்கோ அல்லது நிறுவனத்தின் ரகசியங்களுக்கோ பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
