தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
UPDATED : ஆக 11, 2026 05:18 PM
ADDED : ஆக 11, 2026 02:57 PM

புதுடில்லி:காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு உள்ளன. இவ்விரு அமைப்புகளும் ஒவ்வொரு மாதமும் கூடி காவிரி நீர் பங்கீடும் போது எழும் சிக்கல்களை ஆலோசிக்கின்றன.
அந்த வகையில் டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் இன்று (ஆக.11) கூடியது. கூட்டத்தில் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் மாதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 45.5 டிஎம்சி நீரையும், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் காவிரி நீரையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா 1 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் முடிந்த பின்னர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் தர காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை பிறப்பித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி வீதம், மொத்தம் 15 நாட்களுக்கு 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.
