ஆப்பரேஷன் சிந்துார்: முதல் நாளிலேயே இந்தியா தோற்று விட்டது.. காங்., மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு
ஆப்பரேஷன் சிந்துார்: முதல் நாளிலேயே இந்தியா தோற்று விட்டது.. காங்., மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு
ADDED : டிச 18, 2025 05:53 AM

புதுடில்லி: ''பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை துவங்கிய முதல் நாளிலேயே, நாம் முழுமையாக தோற்று விட்டோம். ''மக்கள் இதை ஏற்கின்றனரோ இல்லையோ, இது தான் உண்மை,'' என, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான், 79, பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை, நம் படைகள் தகர்த்தன.
நம் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாக்., கெஞ்சியதை அடுத்து, சண்டை முடிவுக்கு வந்தது. நம் படைகளின் அசாத்திய திறமையை கண்டு உலக நாடுகளே வியந்து போயுள்ள நிலையில், காங்., தலைவர்கள் மட்டும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான் நேற்று கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்துார் துவங்கிய முதல் நாளிலேயே நாம் முழுமையாக தோற்று விட்டோம். அரை மணி நேர வான்வழி தாக்குதலை கூட நாம் சமாளிக்கவில்லை. மக்கள் இதை ஏற்கின்றனரோ இல்லையோ, இது தான் உண்மை.
நம் விமானப் படையின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. குவாலியர், பதிண்டா அல்லது சிர்சாவிலிருந்து எந்தவொரு விமானம் புறப்பட்டிருந்தாலும், அவை பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருந்தது. அதனாலேயே நம் விமானப்படை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன; ஒரு விமானம் கூட பறக்கவில்லை.
ஆப்பரேஷன் சிந்துாரின் போது நம் ராணுவம் 1 கி.மீ., கூட நகரவில்லை. வான்வழி தாக்குதலே நடந்தது. எதிர் காலத்திலும் போர் இப்படித்தான் இருக்கும் என்றால், 12 லட்சம் வீரர்கள் உள்ள ராணுவத்தை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாமா? இவ்வாறு அவர் கூறினார்.
பிருத்விராஜ் சவானின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கு பதிலளித்த பிருத்விராஜ் சவான், ''நான் தவறாக எதுவும் கூறவில்லை. அரசியலமைப்பு சட்டம் எனக்கு கேள்வி கேட்கும் உரிமையை வழங்கியுள்ளது. எனவே, மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.

