ADDED : செப் 26, 2025 01:33 AM

சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு, 2011ல் நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, சைதை துரைசாமிக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதோடு, தேர்தலில் வெற்றி பெற முறைகேடுகளிலும் ஈடுபட்டார்' என, வாதிட்டார்.
அப்போது பேசிய நீதிபதிகள், 'குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள்; வழக்கு தொடர்பாக ஆவணங்கள் எவை எவை? அது தொடர்பான விபரங்கள் அடங்கிய குறிப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்' என, உத்தர விட்டு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -