குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் பேர்!
குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் பேர்!
ADDED : டிச 18, 2025 02:01 PM

புதுடில்லி: ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள், தங்கள் குடியுரிமையை கைவிட்டு பிற நாடுகளில் குடியுரிமை பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். குறிப்பாக 2022ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் சுமார் 20 லட்சம் பேர் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
2011ல் இருந்து 2021ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 1.20 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2022ம் ஆண்டுக்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் 2 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.
இதற்கான காரணங்கள் தனிப்பட்ட உரிமை. பலர் தங்களின் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்கின்றனர். உலகம் முழுவதும் பெருகி வரும் வேலைவாய்ப்பு காரணமாக, திறன் படைத்தவர்கள், வெளிநாட்டு வாய்ப்புகளை தேடி செல்வது 1970ம் ஆண்டு காலம் முதலே இருந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 2020ல் இது புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலைப்பு சட்டத்தின்படி, மற்றொரு நாட்டின் குடியுரிமையை தானாக முன்வந்து பெறும் போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தானாகவே குடியுரிமையை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

