வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்., திட்டம்!: ரகசிய பயங்கரவாத தளம் அமைப்பதாக 'பகீர்' தகவல்
வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்., திட்டம்!: ரகசிய பயங்கரவாத தளம் அமைப்பதாக 'பகீர்' தகவல்
ADDED : டிச 14, 2025 01:18 AM

புதுடில்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நம் நாட்டில் தாக்குதல்களை மேற்கொள்ள, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ரகசிய பயங்கரவாத தளம் அமைப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உட்பட பல்வேறு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அந்த அமைப்பு களுக்கு, அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவி வருகின்றன.
அவர்களின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவது, பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
தீவிர நடவடிக்கை
ஜம்மு - காஷ்மீர் எல்லை வழியாக அவர்கள் ஊடுருவுவதை தடுக்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இதனால், அந்த வழியாக நுழைய முடியாமல் திணறிய பயங்கரவாதிகள், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம் வழியாக ஊடுருவி வந்தனர்.
அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு நுழைவது கேள்விக் குறியானது.
இந்நிலையில், நம் மற்றொரு அண்டை நாடான வங்கதேசம் வாயிலாக நுழைந்து, இந்தியாவில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
சமீபத்தில், வங்கதேசத்தில் இருந்து வெளியாகும் 'பிளிட்ஸ்' நாளிதழின் ஆசிரியர் சலாஹுதீன் ஷோயப் சவுத்ரி, உசனாஸ் அறக்கட்டளைக்காக கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
வங்கதேச தலைநகர் டாக்கா எல்லை அருகே, இஸ்லாமிய மதக் கல்வியை போதிக்கும் மதரசா ஒன்று செயல்பட்டு வந்தது.
இங்கு, பயங்கரவாதம் தொடர்பான பரப்புரைகள் மற்றும் சொற் பொழிவுகள் நடந்து வந்தன. இந்த மதரசா திடீரென மூடப்பட்டது சந்தேகத்தை எழுப்பி யுள்ளது.
கடந் த மாதம் 10ல், இந்தியாவின் டில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில், ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் அதன் நிர்வாகி ஜவாத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டதை அ டுத்து, வங்கதேசத்தில் உள்ள மதரசா மூடப்பட்டது.
இந்த மதரசாவுக்கு, பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மத அறக்கட்டளைகள், நன்கொடையாளர்களுடன் தொடர்பு இருந்த நிலையில், அது திடீரென மூடப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இருப்பினும், இந்த மதரசா குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த சூழலில், மதரசா மூடப்பட்டது பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை
டில்லி தாக்குதல் குறித்து விசாரிக்கும் புலனாய்வு அமைப்புகள் மதரசாவை நிர்வகிக்கும் நபர்களை நெருங்கும் முன்பே, முன்கூட்டியே தகவலறிந்து அவர்கள் தப்பியோடி உள்ளனர்.
அந்த எச்சரிக்கை விடுத்தவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என, பயங்கரவாத விசாரணைக் குழு சந்தேகிக்கிறது.
இது, வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின், ஐ.எஸ்.ஐ., மற்றும் அதன் கைப்பாவைகள், தங்கள் செயல்பாட்டு வழித்தடங்களை வங்கதேசம் வழியாக மீண்டும் கட்டமைப்பதை, உலக நாடுகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன என்பதை காட்டுகிறது.
வங்கதேச எல்லையில் ரகசிய பயங்கரவாத தளம் அமைத்தது வாயிலாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., மீண்டும் நெருப்புடன் விளையாட முடிவு செய்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு, வங்கதேசத்தை பயன்படுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஒருமுறை இதுபோல் நடந்துவிட்டால், அது மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட மதரசா திடீரென மூடப்பட்டதை சாதாரணமான விஷயமாக கருத முடியாது. இதை, தேச பாதுகாப்புக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'பிளிட்ஸ்' நாளிதழின் ஆசிரியர் சலாஹுதீன் ஷோயப் சவுத்ரியின் இந்த கட்டுரை, வங்கதேசத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், நம் நாட்டை குறிவைத்து பாகிஸ்தான் அங்கு ரகசிய பயங்கரவாத தளத்தை அமைக்க முயற்சிப் பதாக இந்திய உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்குள் நேரடியாக நுழைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், மாற்றுப்பாதை வாயிலாக இங்கு வந்து தாக்குதல் நடத்த பாக்., மற்றும் அந்நாட்டு பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியே இது என, உளவுத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.

