மஹாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்
மஹாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்
ADDED : அக் 15, 2025 11:37 PM

மும்பை: துார்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'மஹாபாரதம்' தொடரில் கர்ணன் பாத்திரத்தில் நடித்த பங்கஜ் தீர், 68, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
கடந்த, 1988ல் துார்தர்ஷன் தொலைக்காட்சியில் மஹாபாரதம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. பல மாதங்கள் ஒளிபரப்பான இந்த தொடருக்கு நாடு முழுதும் இன்றும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில், கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பங்கஜ் தீர். இதன் வாயிலாக பிரபலமானதை தொடர்ந்து, சந்திரகாந்தா, கானுான் உள்ளிட்ட 'டிவி' தொடர்களிலும், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் நடிப்பு பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவர், தன் சகோதரருடன் இணைந்து பல ஹிந்தி படங்களையும் தயாரித்தார். சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பங்கஜ் தீர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். மும்பையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்கஜ் தீர் உடலுக்கு, உறவினர்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின், சான்டா க்ரூசில் உள்ள வில்லே பார்லே பகுதியில் அவரின் இறுதி சடங்குகள் நேற்று மாலை நடந்தன.