ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் களேபரம்: உ.பி., எம்.எல்.ஏ.,- பயணி மோதல்
ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் களேபரம்: உ.பி., எம்.எல்.ஏ.,- பயணி மோதல்
ADDED : அக் 01, 2025 12:29 PM

லக்னோ: ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவரும், உ.பி. மாநில எம்எல்ஏ ஒருவரும் மோதிக் கொண்டனர்.
டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் AI-837 லக்னோவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் உ.பி. மாநிலம் கவுரிகஞ்ச் எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் பயணம் செய்து கொண்டிருந்தார். இதே விமானத்தில் சமத் அலி என்ற பயணியும் இருந்துள்ளார்.
இந் நிலையில், பதேபூர் மாவட்டம், ராஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த பயணி சமத் அலி செல்போனில் யாரோ ஒருவரிடம் உரக்க பேசியதாக தெரிகிறது. பேச்சின் ஊடே, அருவருக்கத்தக்க வகையில் அநாகரிமான வார்த்தைகளை அவர் பிரயோகித்ததாக கூறப்படுகிறது.
அவரின் சத்தமான மற்றும் அருவருக்கத்தக்க பேச்சைக் கண்டு பொறுக்க முடியாத எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். மேலும், அநாகரிகமாக பேச வேண்டாம், மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்று தடுத்துள்ளார்.
அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அதுபோன்றே பேசியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இதே பேச்சு நீடிக்க, இருவருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் அனைத்து பயணிகள் கண் முன்னே இருவரும் மோதிக்கொண்டனர்.
மற்ற பயணிகள் இதைக் கண்டு அலற, விமான சிப்பந்திகள் ஓடி வந்து இருவரையும் விலக்கவிட்டனர். நடுவானில் இருவரும் மோதிக் கொண்டதால் ஒரு கட்டத்தில் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பின்னர் விமானம் லக்னோ விமான நிலையம் வந்தவுடன் இதுகுறித்து எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பயணி சமத் அலியை கைது செய்தனர்.