டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
ADDED : அக் 20, 2025 11:08 AM

புதுடில்லி: டில்லியில் இருந்து நாகலாந்து செல்ல இருந்த விமானத்தில் பயணி ஒருவரின் பையில் வைக்கப்பட்டிருந்த பவர் பேங்க் திடீரென தீ பற்றி எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
நேற்று டில்லியில் இருந்து நாகலாந்தில் உள்ள தீமாபூர் செல்லவிருந்த இண்டிகோ விமானம், டில்லி விமான நிலையத்தின் ஓடுபாதையை நோக்கி நகர்ந்தது. அப்போது, பயணி ஒருவர் தன்னுடைய பையில் வைத்திருந்த பவர் பேங்க் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட பயணிகள் அலறினர். உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட விமானப் பணியாளர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பவர் பேங்கில் உள்ள லித்தியம் பேட்டரி காரணமாக இந்தத் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பிறகு, முழு சோதனைக்குப் பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதேபோல, கடந்த வாரம் ஏர் சீனா விமானத்தில் பயணிகளின் உடமைகள் வைக்கும் பகுதியில் லித்தியம் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.