'தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு; எதிர்த்தவர்களை கைது செய்தது பேரவலம்': சீமான்
'தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு; எதிர்த்தவர்களை கைது செய்தது பேரவலம்': சீமான்
UPDATED : டிச 19, 2025 05:18 AM
ADDED : டிச 19, 2025 05:01 AM

சென்னை: 'தி.மு.க., இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக, சரளை மண் திருடியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரியவர்களை, கைது செய்தது பேரவலம்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
அவரது அறிக்கை:
திருவண்ணாமலையில், 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, தி.மு.க., இளைஞரணி மாநாடு நடந்தது. அந்த இடத்தை சமப்படுத்த, மலப்பம்பாடி ஏரியில் இருந்து, 2,000 லோடு சரளை மண் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. இது, தி.மு.க.,வினருக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரா சர்க்கரை ஆலை வளாகத்தில், கொட்டி வைக்கப்பட்டது.
அனுமதியின்றி ஏரிக்கரையில், 30 அடி தார் சாலை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, உழவர் உரிமை இயக்கம் சார்பில், அருள் ஆறுமுகம், அம்மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு மனு கொடுத்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, 14ம் தேதி, 2,000 விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் மற்றும் 22 விவசாயிகளை முன்னெச்சரிக்கையாக, போலீசார் கைது செய்து, போளூர் சிறையில் அடைத்தனர். தி.மு.க., மாநாடு முடிந்ததும் விடுதலை செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தது பேரவலமாகும்.
கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்போரை கைது செய்ய திறனற்ற தி.மு.க., அரசு, அப்பாவி விவசாயிகளை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது தான், விவசாயிகளை பாதுகாக்கும் முறையா. தி.மு.க.,வின் மண் காக்கும், மானம் காக்கும் முறையா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

