ரூ.60 கோடி கட்டினால் அனுமதி; நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் கண்டிப்பு
ரூ.60 கோடி கட்டினால் அனுமதி; நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் கண்டிப்பு
ADDED : அக் 08, 2025 06:21 PM

மும்பை: மஹாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவும், தன்னிடம் 60 கோடி ரூபாய் நிதி பெற்று விட்டு, அதனை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீசில் தொழிலதிபர் தீபக் கோத்தாரி, 60, என்பவர் புகாரளித்தார்.
டீல் 'டிவி' பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 60 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, பின்னர் அந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் புகார் அளித்தார். மேலும், தன்னிடம் வாங்கிய 60 கோடி ரூபாயை, வேறு நிறுவனங்களில் ஷில்பா - ராஜ் தம்பதி முதலீடு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க இருவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் கொழும்புவில் அக்.,25 முதல் 29ம் தேதி வரை நடக்கும் யுடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நடிகை ஷில்பா ஷெட்டி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நீதிபதி கேட்டனர். அப்போது, தற்போது தொலைபேசியின் வாயிலாக மட்டுமே அழைப்பு வந்ததாகவும், நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் முறையான அழைப்பிதழ் கிடைக்கும் என்று ஷில்பா ஷெட்டி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி, வெளிநாடு செல்ல ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டார். மேலும், முதலில் ரூ.60 கோடி செலுத்துங்கள் என்றும் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை அக்.,14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் குடும்பத்துடன் தாய்லாந்து செல்ல ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் அதற்கும் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.