நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: சொல்கிறார் கார்கே
நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: சொல்கிறார் கார்கே
ADDED : டிச 17, 2025 11:14 AM

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றுள்ளது. தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோருக்கு எதிராக ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது குறித்து டில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கின் நோக்கம் காந்தி குடும்பத்தை துன்புறுத்துவது ஆகும்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது. அவர்கள் (பாஜ) மக்களை இப்படித் தொந்தரவு செய்யக்கூடாது. இந்த செய்தித்தாள் 1938ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது. இப்போது பாஜ அரசு பணமோசடி உள்ளிட்ட விஷயங்களுடன் இணைத்து அவதூறு பரப்ப முயற்சிக்கிறது. உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் எந்தப் பிரச்னையும் இல்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதை பாஜ ஒரு பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறது. தற்போதைய அரசு அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரித்து வரும் வழக்குகளைப் பயன்படுத்துகிறது. தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கில் தீர்ப்பு நீதிக்கு சாதகமாக வந்துள்ளது. உண்மை வென்றுள்ளது. இந்தத் தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இவ்வாறு கார்கே கூறினார்.

