ஆசியான் நாடுகளுக்கு இலவச இ-விசா: பிரதமர் மோடி அறிவிப்பு
ஆசியான் நாடுகளுக்கு இலவச இ-விசா: பிரதமர் மோடி அறிவிப்பு
ADDED : நவ 17, 2026 08:52 PM

மணிலா: 'ஆசியான்' எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியருக்கு இலவச இ - விசா உட்பட பல முக்கிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 23வது இந்தியா - ஆசியான் உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பிரதமர் மோடி முக்கிய முன்மொழிவுகளை மாநாட்டில் எடுத்துரைத்தார்.
இந்தியா - ஆசியான் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பிரதமர் மோடி முன்மொழிந்த திட்டங்கள்:
* ஆசியான் கூட்டமைப்பு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு கட்டணமின்றி இலவச மின்னணு விசா வழங்கப்படும்
* கடல்வழி இணைப்பு, அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோர காவல்படை ஒத்துழைப்பு, கடல்சார் விழிப்புணர்வு மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை
* ஆசியான் நாடுகளுடன் அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பயிற்சி திட்டங்களில் கூட்டு செயல்பாடு மற்றும் கிரிப்டோ கரன்சியில் ஒத்துழைப்பு
* அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு அடிப்படை தேவையான முக்கிய தாதுக்கள் மற்றும் கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு
* பிராந்தியத்தில் சைபர் பாதுகாப்பு திறன் மேம்பாட்டிற்காக கூட்டு சைபர் தடயவியல் பயிற்சி திட்டம்
* இந்தியா - ஆசியான் விண்வெளி தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் விவசாயம், வள மேலாண்மையில் அவற்றை பயன்படுத்தும் சிறப்பு திட்டங்கள்
* நாளந்தா பல்கலையில் ஆசியான் நாடுகளுக்கான கல்வி உதவித் தொகையை அதிகரித்தல்.
