பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி
பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி
ADDED : செப் 07, 2025 04:18 PM

புதுடில்லி: பாஜ எம்பிக்களுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் பிரதமர் மோடி, கடைசி வரிசையில் அமர்ந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியான அந்தப் பதவிக்கு வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜ கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். ' இண்டி' கூட்டணி சார்பில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சர் ரெட்டி போட்டியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த தேர்தலில் எம்பிக்கள் பணியாற்ற வேண்டிய விதம் தொடர்பாக பாஜ எம்பிக்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.முதல் நாளான இன்று, ' 2047 ல் வளர்ச்சியடைந்த இந்தியா', மற்றும் ' சமூக வலைதளை்த எம்பிக்கள் திறமையாக கையாள்வது எப்படி ?' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு வந்தே பாரதம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் இந்த பயற்சி பட்டறையில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற அவரை ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்ததற்கு எம்பிக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி இந்த பயிற்சி பட்டறையில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. மதியம் நடக்கும் நிகழ்வில், விவசாயம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் போக்குவரத்து குறித்த குழுக்களை எம்பிக்கள் சந்திக்கின்றனர். நாளை நடக்கும் நிகழ்வில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து எம்பிக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.