ஹங்கேரி செல்லும் போது தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது: புடினுக்கு போலந்து எச்சரிக்கை
ஹங்கேரி செல்லும் போது தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது: புடினுக்கு போலந்து எச்சரிக்கை
ADDED : அக் 21, 2025 09:26 PM

மாஸ்கோ: ஹங்கேரிக்கு செல்லும் வழியில், ரஷ்ய அதிபர் புடின் தங்கள் நாட்டு வான்வெளி வழியாக பறந்தால் கைது செய்யப்படுவார் என போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஹங்கேரியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க இருக்கிறார். அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கின்றனர். இந்த சூழலில், ஹங்கேரியில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக தனது வான்வெளி வழியாக ரஷ்ய அதிபர் புடின் பயணிக்க கூடாது என்று போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கூறியதாவது: ஹங்கேரிக்கு செல்லும் வழியில் புடின் தனது வான்வெளியை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், சர்வதேச கைது வாரண்டை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர் கைது செய்யப்படுவார்.
இந்த உச்சிமாநாடு நடைபெற வேண்டுமானால், விமானம் வேறு பாதையைப் பயன்படுத்தும் என்று நம்புகிறோம். தாக்குதல்கள் தொடர்வதால், புடினின் விமானம் தரையிறக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.