குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறை; அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவல்துறை; அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
UPDATED : டிச 31, 2025 03:52 AM
ADDED : டிச 31, 2025 03:51 AM

சென்னை: 'குண்டர் தடுப்பு சட்டத்தை, உள்நோக்கத்துடன் பயன்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி என்ற கிருஷ்ணகுமார்; யு டியூபர். இவர், தி.நகரில் அமீனால் பீவீ என்பவர் வீட்டில் குடியிருந்தார்.
வீட்டை காலி செய்ய மறுத்து, ஆபாசமாக திட்டி யதாக, போலீசில் அமீனால் பீவி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாராகியை கைது செய்தனர்.
பின், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டிசம்பர், 3ம் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, வாராகி யின் மனைவி நீலிமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை, மறு பரிசீலனை செய்யக்கோரி, அரசுக்கு அளித்த மனு, தாமதமாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
'காவல் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21, தனி நபர் சுதந்திரத்துக்கான உரிமையை பாதுகாக்கிறது. அதேபோல, ஜனநாயகத்தின் அடிப்படை, கருத்துகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது.
சட்டத்திற்கு முரணாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஒருவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டால், அதை தொடர அனுமதிக்க முடியாது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஒரு நபரை தடுப்பு காவலில் வைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தும் போது, அரசு கவனமாக செயல்பட வேண்டும். அரசு துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, மனுதாரரின் கணவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. எனவே, வாராகிக்கு மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்குகிறோம்.
உள்நோக்கத்துடன், இயந்திரத்தனமாக, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவை பிறப்பிக்கும், காவல்துறை அதிகாரிகள் மீது, தமிழக அரசின் உள்துறை செயலர், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு, 12 வாரங்களுக்குள், காவல் துறை பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்

