மாநில அளவிலான 'சீனியாரிட்டி' முறையை அமல்படுத்த காவல்துறைக்கு உத்தரவு
மாநில அளவிலான 'சீனியாரிட்டி' முறையை அமல்படுத்த காவல்துறைக்கு உத்தரவு
ADDED : மே 28, 2026 12:43 AM

சென்னை: 'தமிழக காவல் துறையில், சரக அளவில் இருந்த, 'சீனியாரிட்டி' எனப்படும் பணி மூப்பு முறைக்கு பதிலாக, மாநில அளவிலான பணி மூப்பு முறையை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை ப ணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்படுவோர், 10 ஆண்டுகள் பணி முடித்தால், முதல் நிலை காவலர்களாக; அதன் பின் ஐந்து ஆண்டுகள் பணி முடித்தால், தலைமைக் காவலர்களாக; மேலும் 10 ஆண்டுகள் பணி முடித்தால், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெறுவர்.
இம்முறையில், முதல் நிலைக் காவலராக தேர்வு செய்யப்படும் காவலர்கள், திருச்சி, மதுரை, நெல்லை போன்ற சரகங்களில், ஆயுதப் படைக்கு மாற்றப்படும்போது, அங்குள்ள காலியிடங்கள் அடிப்படையில், விரைவாக பதவி உயர்வு பெற்று விடுவர்.
சென்னை போன்ற பெருநகரங்களில், காலி பணியிடங்கள் குறைவாக இருப்பதால், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகும்.
இதனால், பதவி உயர்வு கிடைக்காமல், பாதிக்கப்பட்ட காவலர்கள் பலர், தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, நீண்ட நாட்களாக விசாரித்து வந்தது.
விசாரணையின் போது, 'இவ்விவகாரம் தொடர்பாக, அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும். மாற்று ஏற்பாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம்' என, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த, தமிழக உள்துறை செயலர், 'ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக, தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து கணக்கிட்டு, சிறப்பு எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பதவி உயர்வுக்கு, மாநில அளவிலான சீனியாரிட்டி முறை அமல்படுத்தப்படும்' என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக காவல் துறையில், கடந்த 2006 முதல் நடந்த, சரக அளவிலான பதவி உயர்வு வாரிய தேர்வு முறை என்ற, தமிழக காவல் சார்நிலை பணி சிறப்பு விதிகள் தேவையில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆயுதப்படையில் 1993ம் ஆண்டில் தேர்வாகி, இதுவரை பணியில் உள்ளவர்களுக்கு, மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதற்கான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநில அளவிலான பணி மூப்பு, 2026 ஜனவரி 1ம் தேதி பணியில் உள்ளவர்களிடம் அமல்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு டிச.,31ம் தேதி அல்லது அதற்கு முன்பு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, இது பொருந்தாது.
இந்த உத்தரவின் அடிப்படையில், அவர்கள் பணபலன்களையோ, நிலுவை பலன்களையோ கோர முடியாது. அதே நேரம், ஏற்கனவே சரக அடிப்படையிலான தேர்வு வாயிலாக, பதவி உயர்வு பெற்றவர்களையும், அவர்கள் பெறும் பலன்களையும் தொந்தரவு செய்யக்கூடாது.
மாநில அளவில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என, உடனே அரசாணை பிறப்பிக்க வேண்டும். மாநில அளவில் பணி மூப்பு பட்டியலை, இரண்டு மாதங்களுக்குள் வெளியிட வேண்டும். இந்த வழக்கில் விரைந்து முடிவெடுக்க, நீதிமன்றத்திற்கு உதவிய, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
