பிரதமரை விமர்சித்து போஸ்டர்: நடவடிக்கை எடுக்காத போலீஸ்
பிரதமரை விமர்சித்து போஸ்டர்: நடவடிக்கை எடுக்காத போலீஸ்
ADDED : நவ 21, 2025 07:18 AM

கோவை: பிரதமரை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மெத்தனமாக உள்ளனர்.
தென்இந்திய இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், 19 ம் தேதி துவங்கியது. மாநாட்டை பிரதமர் மோடி துவங்கிவைத்தார். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு அமைப்புகள் சார்பில், அவினாசி ரோடு பகுதியில் போஸ்டர் ஒட்டினர். அந்த போஸ்டரில், 'பீகார் மக்களை தமிழர்கள் தாக்கியதாக பொய் பிரசாரம் செய்த மோடியே திரும்பி போ', 'கோ பேக் மோடி' என்ற வாசகம் அடங்கி இருந்தது.
போஸ்டர் ஒட்டிய முற்போக்கு அமைப்புகள் குறித்து, பீளமேடு போலீசில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து, வானதி சீனிவாசன் எம்.எம்.ஏ., கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருந்தார். அதன் பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டு வதற்கு போலீசார் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் போஸ்டர் ஒட்டுகின்றனர். ஒரு கட்சியை விமர்சித்து போஸ்டர் ஒட்டும் போது, மாற்று கட்சியினர் பதிலுக்கு ஒட்டுகின்றனர். இதனால் தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. ஆனாலும்,போலீசார் இதை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக போஸ்டர் அச்சடிக்கும் போது, எந்த அச்சகத்தில் பிரின்டிங் செய்யப்பட்டது. அச்சகத்தின் போன் எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகளை எந்த அச்சகமும் பின்பற்றுவதில்லை. பணத்திற்காக இஷ்டம் போல அச்சடித்து கொடுக்கின்றனர். அவ்வாறு செயல்படும் அச்சகம் மீதும் போலீசார் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பீளமேட்டில் பிரதமரை விமர்சித்து ஒட்டியது தொடர்பாக விசாரித்து வருகிறோம். போஸ்டர் ஒட்டியவர்கள் மற்றும் பிரின்டிங் செய்த அச்சகத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

