ADDED : நவ 23, 2026 03:46 PM

- நமது சிறப்பு நிருபர் -
ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் அமைப்பு2026ம் ஆண்டுக்கான ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத் திறன், ராணுவ திறன்,மீள்திறன், எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாசார செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இப்பட்டியலில் அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
சீனா 73.6 புள்ளிகளுடன் 2வது இடத்திலும்
இந்தியா,40.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.
ஜப்பான் 38.6 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் கலாசார ஆதிக்கம் ஆகியவை காரணமாக, இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
மேலும், ஆசியாவின் மிகவும் திறமையான பிராந்தியத் தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார்.
பெருமிதம்
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:லோவி இன்ஸ்டிடியூட் மட்டுமல்ல, பல சர்வதேச தர மதிப்பீட்டு அமைப்புகளும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் நிதித்துறைகளில் இந்தியாவிற்கு மிக உயர்ந்த இடங்களை வழங்கி உள்ளன.
12 ஆண்டுகளுக்கு முன்பு நாடு தர வரிசையில் பின்னோக்கி இருந்தது. தற்போது முன்னேறி உள்ளது. இன்று நாம் முதல் நான்கு இடங்களுக்குள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறோம். இந்தியா தற்போது மாறிவிட்டது. நமது தலைமைத்துவம் வலிமையானது. எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறலாம். ஏனென்றால் அவர்களால் மோடி அரசை பாராட்ட முடியாது என்பது இயல்பானதே.
எதிர்க்கட்சிகள் நம்மை பாராட்டவில்லை என்பதற்காக அவர்கள் சொல்வது சரி என்று அர்த்தமல்ல. அவர்களுக்கு பேசுவதற்கு உரிமை உண்டு. ஆனால் நாடு மாறிவிட்டது. இந்தியா வெகுதூரம் முன்னேறிவிட்டது. இந்தாண்டு இந்தியா தனது முக்கிய சக்தி அந்தஸ்தை உறுதிப்படுத்திக் கொண்டதோடு ஆசியாவில் மிக செல்வாக்குமிக்க நாடாகவும் வளர்ந்துள்ளது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
