ஒரே ஓவரில் 2 விக்கெட் இழந்தது பெங்களூரு; மல்லுக்கட்டும் குஜராத்
ஒரே ஓவரில் 2 விக்கெட் இழந்தது பெங்களூரு; மல்லுக்கட்டும் குஜராத்
UPDATED : மே 31, 2026 10:46 PM
ADDED : மே 31, 2026 09:21 PM

ஆமதாபாத்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் 156 ரன் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறது.
ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணிக்கு கேப்டன் கில்லும், சாய் சுதர்சனும் களமிறங்கினர். ஆனால், எதிர்பார்த்த துவக்கம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கேப்டன் கில் (10), சாய் சுதர்சன் (12) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பிறகு வந்த நிஷாந்த் சிந்துவும் (20) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. பட்லரும் 19 ரன்னில் க்ருணல் பாண்டியா பந்தில் அவுட்டாகினார்.
தொடர்ந்து, அர்ஷத் கானும், வாஷிங்டன் சுந்தரும் ஜோடி சேர்ந்து ஓரளவுக்கு ரன் குவித்தனர். அர்ஷத் கான் (15), திவாட்டியா (7), ஹோல்டர்(7) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் குவித்துள்ளது.பெங்களூரு அணி தரப்பில் ரஷிக் 3 விக்கெட்டும், ஹசில்வுட், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டும், க்ருணல் பாண்டியா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
156 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்தில் 32 ரன் சேர்த்த வெங்கடேஷ் ஐயர், சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு வந்த படிக்கல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதரும், கோலியுடன் சேர்ந்து ரன் குவித்தார். 9வது ஓவரை வீசிய ரஷித் கான், பட்டிதாரையும் (15), க்ருணல் பாண்டியாவையும் (1) ஒரே ஓவரில் அவுட்டாக்கி அசத்தினார். 10 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன் எடுத்துள்ளது.
