திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா; திருப்பரங்குன்றத்தில் திக்...திக்..
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா; திருப்பரங்குன்றத்தில் திக்...திக்..
UPDATED : நவ 24, 2026 04:58 PM
ADDED : நவ 24, 2026 04:35 PM

-நமது நிருபர்-
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பினரும், நீதிமன்ற கண்டனத்தை எதிர்கொண்டாலும் தப்பில்லை என்ற முடிவில் அரசு இருப்பதாக இன்னொரு தரப்பினரும் கூறுவதால், திருப்பரங்குன்றத்தில் திக்...திக்... சூழல் நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் அல்ல; நில அளவைக்கல் என்று திமுக அரசு கூறியது போல, தவெக அரசும் கூறியது; அதை காரணம் காட்டி, தீபம் ஏற்றாமல் இருக்கவே முயற்சித்தது. அது மட்டுமின்றி, திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்றும் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தீபம் ஏற்றாமல் விட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் ஒரு பக்கம், உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையில் நீதிபதி கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள் மறு பக்கம் என அரசை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளன.
இதன் காரணமாக, தீபத்துாணில் தீபம் ஏற்றும் முடிவுக்கு அரசு வந்துள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இன்னொரு தரப்பினரோ, நீதிமன்ற கண்டனத்தை எதிர்கொண்டாலும் தப்பில்லை; தீபத்தை ஏற்றாமல் இருந்து விடலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளதாக கூறுகின்றனர்.
எனினும் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை இன்று காலை அலுவலர்கள் செய்துள்ளனர்.
