ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
UPDATED : நவ 22, 2025 12:32 PM
ADDED : நவ 22, 2025 12:16 PM

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புட்டபர்த்தியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர், ''பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தார்'' என பேசுகையில் குறிப்பிட்டார்.
ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில், புட்டபர்த்தியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார்.
புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்திற்கு வந்த திரவுபதி முர்முவை, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தார். மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று அவர் பணியாற்றினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும்படியும், ஆன்மிகத்தை பொது மக்கள் நலனுக்கு பயன்படும் வகையில் பணியாற்றுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
அகிம்சை, அமைதி
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது துாண்டுதலால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவரது போதனைகள், எக்காலத்துக்கும் மனித குலத்துக்கு பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும். உலகமே ஒரு கல்விக்கூடம். அதில், உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி ஆகிய ஐந்தும் தான் பாடத்திட்டம் என்று அவர் மனதார நம்பினார். இவ்வாறு அவர் பேசினார்.
'ஜெய்ஹிந்த், ஜெய் பாரத்' எனக் கூறி, திரவுபதி முர்மு உரையை நிறைவு செய்தார்.

