பிரதமர் மோடியின் தலைமையே மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்; மஹா., முதல்வர் பட்னவிஸ் மகிழ்ச்சி
பிரதமர் மோடியின் தலைமையே மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்; மஹா., முதல்வர் பட்னவிஸ் மகிழ்ச்சி
ADDED : டிச 21, 2025 06:33 PM

மும்பை: பிரதமர் மோடியின் தலைமை, ஜே.பி. நட்டாவின் வழிகாட்டுதலே, உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா முழுவதும் 286 நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நடக்கிறது. பாஜ தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மஹாயுதி கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளது. வாக்காளர்களுக்கு நன்றியை மஹாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜ மீண்டும் முதலிடத்தில் உள்ளது.பிரதமர் மோடியின் தலைமை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஆகியோரின் வழிகாட்டுதலே கட்சியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.
பாஜ மாநிலத் தலைவர் எம்எல்ஏ ரவீந்திர சவான் மற்றும் தொண்டர்களின் அயராத முயற்சியால், பாஜ மீண்டும் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வாக்காளர்களுக்கு மிக்க நன்றி. இவ்வாறு முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.

