எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி 'கலகல'
எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி 'கலகல'
ADDED : டிச 20, 2025 02:31 AM

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் , லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில், அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்றனர். எம்.பி.,க்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.
தேநீர் விருந்து குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ல் துவங்கிய நிலையில், நேற்று நிறைவடைந்தது. தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் லோக்சபா, ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டன.
வழக்கமான நடவடிக்கையாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சி எம்.பி.,க்களுக்கும் தேநீர் விருந்து அளித்தார். இதில், பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்., - எம்.பி., பிரியங்கா, சமாஜ்வாதி எம்.பி., - தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு எம்.பி., - சுப்ரியா சுலே, தி.மு.க., - எம்.பி., ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜ்நாத் சிங் அருகே அமர்ந்திருந்த பிரியங்கா, தனக்கு இருக்கும் ஒவ்வாமையை குணப்படுத்த, தன் சொந்த தொகுதியான வயநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பு மூலிகையை உட்கொள்வதாக கூறினார்.
இதை கேட்ட பிரதமர் மோடியும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சிரித்தனர். எத்தியோப்பியா, ஜோர்டான், ஓமன் பயணங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் பிரியங்கா விசாரித்தார். அனைத்தும் சுமுகமாக இருந்ததாக மோடி பதிலளித்தார்.
சமாஜ்வாதி எம்.பி., தர்மேந்திர யாதவ், “கூட்டத்தொடரை இன்னும் சில நாட்கள் நீட்டித்திருக்கலாம்,” என்றார்.
நகைச்சுவை அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “உங்கள் குரல் வளம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே கூட்டத்தொடரை விரைவாக முடித்து விட்டோம்,” என நகைச்சுவையாகக் கூறியதும், அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
எம்.பி.,க்கள் அமர்ந்து பேச, பழைய பார்லி., கட்டடத்தில் இருந்தது போல புதிய கட்டடத்திலும் ஓர் அரங்கு அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பிரதமர் மோடி, “அதெல்லாம் ஓய்வுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்; நீங்கள் இன்னும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன,” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

