ஓட்டுகளை மனதில் வைத்து நிதியுதவி: பீஹாரில் பிரியங்கா குற்றச்சாட்டு
ஓட்டுகளை மனதில் வைத்து நிதியுதவி: பீஹாரில் பிரியங்கா குற்றச்சாட்டு
ADDED : செப் 26, 2025 06:38 PM

பாட்னா: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டுகள் மீது மட்டுமே குறியாக உள்ளது. அக்கூட்டணிக்கு பீஹார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பீஹார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: தேர்தல் நெருங்குவதால், முதல்வர் மகிளா ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது மாதந்தோறும் அளிக்கப்படும் என அவர்கள் உறுதி அளிக்கவில்லை.
அவர்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளும் திறன் பெண்களுக்கு உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரின் நோக்கங்களை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஓட்டுகளை மனதில் வைத்துமட்டுமே இந்த நிதியுதவியை அளித்துள்ளனர். அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும். உங்களுக்கான மரியாதையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. உங்களின் பாதுகாப்பை அவர்களால் தர முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. காங்கிரஸ், பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்கும். நிலம் இல்லாத விவசாய குடும்பத்துக்கு நிலம் வழங்குவதுடன் அதனை பெண்கள் பெயரில் பதிவு செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.