UPDATED : டிச 21, 2025 08:22 AM
ADDED : டிச 21, 2025 02:36 AM

பார்லி., கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து லோக்சபா சபாநாயகர் தேநீர் விருந்தளிப்பார்; இது, வழக்கமானது. பிரதமர் மோடி உட்பட அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்பர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இதில் எப்போதுமே பங்கேற்றதில்லை.
காரணம், 'சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்' என, அவர் சொன்னாலும், 'மோடியை நேரடியாக சந்திக்க ராகுல் விரும்புவதில்லை என்பது தான் உண்மை' என்கின்றனர் காங்கிரசார்.
குளிர் கால கூட்டத்தொடர் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேநீர் விருந்து நடந்தது. பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் பங்கேற்றனர். ராகுல், வெளிநாட்டில் இருப்பதால் பிரியங்கா பங்கேற்று, அனைவரிடமும் கலகலப்பாக பேசினார். பிரதமரிடம், 'உங்கள் வெளிநாடு பயணம் எப்படி இருந்தது?' என, விசாரித்ததுடன், தன் வயநாடு தொகுதியிலிருந்து, தனக்கு கிடைக்கும் அரிய மூலிகை குறித்தும் பிரதமரிடம் பேசினாராம் பிரியங்கா. பதிலுக்கு மோடியும், பிரியங்காவிடம் நலம் விசாரித்தாராம்.
இடதுசாரி எம்.பி.,யான கேரளாவைச் சேர்ந்த பிரேமச்சந்திரனை மோடி புகழ்ந்து தள்ளி விட்டாராம். 'எப்போது இவர் பேசினாலும், அதற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டு விரிவாக பேசுகிறார்' என சொன்னாராம்.
பிரிய ங்காவிற்கும், ராகுலுக்கும் இடையே உறவில் விரிசலா என்றால், 'அதெல்லாம் இல்லை... இந்த முறை லோக்சபா நன்றாகவே நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கினார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதனால் தான், பிரியங்கா இந்த விருந்தில் பங்கேற்றார்' என்கின்றனர் காங்கிரசார்.
பார்லி.,யில் மோடி அரசை விமர்சித்தாலும், தன் தொகுதிக்கு வேண்டியதை, சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து சாதித்துக் கொள்கிறார் பிரியங்கா. ராகுலை போல கோபப்படாமல், அமைச்சர்களிடம் நன்றாக பேசுகிறார்; அமைதியாக அரசியல் செய்கிறார். ஆனால், ராகுலோ கோபம் காட்டுகிறார்' என கட்சி தலைவர்கள் பிரியங்காவை பாராட்டுகின்றனர்.

