ADDED : செப் 10, 2025 06:39 AM

ஷிவமொக்கா: கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மிலாடி நபி ஊர்வலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவின் பத்ராவதி டவுனில், மிலாடி நபியையொட்டி நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் பேரணி நடத்தினர். அப்போது, சில வாலிபர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில், பத்ராவதி சீகேபாகி பகுதியிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோ வெளியானது. இதனால், பா.ஜ., தலைவர்கள், ஹிந்து அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
'இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தேச துரோகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை கைது செய்ய கோரி, நேற்று மாலை ஷிவமொக்கா டவுனில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, மிலாடி நபி பேரணி துவக்க நிகழ்ச்சியில், பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் பேசுகையில், “நான் நான்கு முறை எம்.எல்.ஏ., ஆனதற்கு முஸ்லிம் நண்பர்கள் தான் காரணம். இறுதி வரை உங்கள் குடும்பத்தின் மகனாக இருப்பேன். அடுத்த ஜென்மத்தில் முஸ்லிமாக பிறக்க ஆசைப்படுகிறேன்,” என்றார்.
இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதை பார்த்தால், மதமாற்றத்தை இவர்களே ஆதரிப்பது போன்று உள்ளது,” என்றார்.