ADDED : அக் 15, 2025 07:51 PM

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார். நாளை மறுநாள் (அக்.,17) புதிய மேயர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன்,உதவி வருவாய் ஆய்வாளர், உதவி ஆணையர் உதவியாளர், புரோக்கர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தியதாக மேயர் இந்தராணி கணவர் பொன் வசந்த் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திமுக மண்டலத் தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களின் கணவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்கள் கேஎன் நேரு, மூர்த்தி ஆகியோரும், மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்கள் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் திமுக தலைமை நெருக்கடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அவர் வழங்கினார். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து நாளை மறுநாள் ( அக்.,17) துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்களின் அவசர கூட்டம் நடைபெற இருக்கிறது. ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அன்றைய தினமே புதிய மேயர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.