அங்கீகாரமில்லாத மனைகள் விவகாரம்: விதிகளை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் பொதுமக்கள் குமுறல்
அங்கீகாரமில்லாத மனைகள் விவகாரம்: விதிகளை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் பொதுமக்கள் குமுறல்
ADDED : செப் 08, 2025 01:45 AM

சென்னை: அங்கீகாரமில்லாத மனைகளை பதிவதற்கு தடை விதிக்கும் விதிமுறைகளை தவறாக பயன்படுத்தி, சார் - பதிவாளர்கள் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை மற்றும் பத்திரப்பதிவுக்கு, 2016ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2016 அக்டோபர் 20க்கு முன் மக்கள் வாங்கிய அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், பதிவு சட்டத்தில் 22ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, அதற்கான அரசாணை 2016 அக்., 20ல் வெளியிடப்பட்டது.
இதில், நகர், ஊரமைப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அங்கீகாரமின்றி விற்கப்படும் மனைகள் தொடர்பான பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் நிராகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், அரசாணை தேதிக்கு முன், குடியிருப்பாக பதிவு செய்யப்பட்ட மனைகள் தொடர்பாக வரும் புதிய பத்திரங்களை பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இவ்விஷயத்தில் சார் - பதிவாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முடிவெடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில், 2016க்கு முன் வீட்டு மனையாக பதிவான சொத்துக்கள் தொடர்பாக வரும் பத்திரங்களை, அங்கீகாரம் இல்லை என கூறி சார் - பதிவாளர்கள் நிராகரிக்கின்றனர்.
இந்த மனைகளுக்கு தற்போது புதிதாக அங்கீகாரம் அல்லது வரன்முறை பெறுவது சாத்தியமில்லை. ஆனால், 'சார் - பதிவாளர்கள் தங்கள் விருப்பம் போல வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், மற்றவர்களுக்கு ஒருவிதமாகவும் முடிவு எடுக்கின்றனர்' என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கீகாரமில்லாத மனைகள் பதிவை தடை செய்யும் அரசாணையை விளக்கி, பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அதிலுள்ள வழிகாட்டுதல்களை, சார் - பதிவாளர்கள் முறையாக கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2021 வரை, பல முறை பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்தின் பத்திரத்தை பதிவு செய்ய, தென்காசி சார் - பதிவாளர் மறுத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட சொத்து பத்திரத்தை நான்கு வாரத்துக்குள் பதிவு செய்ய, சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு பத்திரத்துக்கும் பொதுமக்கள் நீதிமன்றம் சென்று, ஆணை பெற வேண்டிய நிலையை சார் - பதிவாளர்கள் ஏற்படுத்து வதாக புகார்கள் வந்துள்ளன.
இவற்றில், விதிகளுக்கு மாறாக செயல்படும் சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. பொதுமக்களை அலைக்கழிக்காமல் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.