ADDED : அக் 22, 2026 04:14 AM

சென்னை: 'கிரானைட்' வீரமணி வழக்கில் விசாரணைக்கு ஆளான ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா, பணியிடம் இன்றி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில், சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா பணியாற்றினார். தற்போது, டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாக பிரிவு ஐ.ஜி.,யாக இருந்தார்.
சிறுமியரை வன்முறை செய்ததாக, கிரானைட் வீரமணி மீது புகார் வந்தபோது, அவர் சென்னை போலீசில் பணிபுரிந்தார். அதனால், அவரை தற்போது எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.
தற்போது, அவர் வகித்து வந்த, டி.ஜி.பி., அலுவலக நிர்வாக பிரிவுக்கு, திருச்சி கமிஷனராக இருந்த காமினி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், ராதிகா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி., அருண், டி.எஸ்.பி., யாஸ்மின் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
