பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பு
பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பு
ADDED : அக் 29, 2025 09:58 PM

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்த ராகுலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில், சாத் பண்டிகை மற்றும் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக சாடினார். அவர் 'ஓட்டுகளுக்காக பிரதமர் மோடி எதையும் செய்வார். பீஹாரில் நிதிஷ் குமார் அரசு பாஜ ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடக்கிறது என குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி குறித்த ராகுலின் கருத்துக்கு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீஹார் புனித பூமியிலிருந்து, நாட்டுப்புற நம்பிக்கையின் மாபெரும் திருவிழாவான சாத் பண்டிகையை ராகுல் அவமதித்து இருப்பது, லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறது. சனாதன கலாசாரத்தின் மீதான அவரது வெறுப்பை பிரதிபலிக்கிறது.
பிரதமர் மோடி மீது காங்கிரஸின் வெறுப்பையும், விரக்தியையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் விரட்டி மற்றும் தோல்வி பயத்தால் ராகுல் இவ்வாறு பேசி வருகிறார். பிரதமர் மற்றும் அவரது மரியாதைக்குரிய தாய்க்கு எதிராக முன்பு அநாகரீகமாக காங்கிரஸ் கட்சியினர் பேசியிருந்தனர்.
ராகுல், தேஜஸ்வி யாதவ் மற்றும் அவர்களது மகா கூட்டணி எப்போதும் பீஹாரின் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் லட்சியங்களை தகர்த்தெறிந்து, காட்டாச்சி ராஜ்யத்தை ஊக்குவித்து வருகின்றன.
இன்று, தோல்வியின் விரக்தியால் ராகுல் இத்தகைய அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகிறது. இருப்பினும், பீஹார் மக்கள் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை விரும்புகிறார்கள். உறவினர்களுக்கு ஆதரவான அரசியல் அல்ல. பிரதமர் குறித்த கருத்துக்கு ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

