யானைகள் பலியாவதை தடுக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம் விரிவாக்கம்: ரயில்வே துறை முடிவு
யானைகள் பலியாவதை தடுக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம் விரிவாக்கம்: ரயில்வே துறை முடிவு
ADDED : டிச 07, 2025 12:08 AM

புதுடில்லி: ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க உதவும் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய முறை, வட மாநிலங்களில் அமலில் உள்ள நிலையில், அதை மேலும் பல பகுதிகளுக்கு நீட்டிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் வனப் பகுதிகளை ஒட்டி ரயில் தடங்கள் அமைந்துள்ளன.
உணவுப் பொருட்களை தேடி செல்லும் யானைகள், ரயில் மோதி பலியாவது தொடர்கதையாக உள்ளன.
இதை தடுக்க ரயில் பாதையின் இருபுறங்களிலும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், யானைகள் செல்ல சுரங்கப் பாதையை ஏற்படுத்துதல், ஒலிபெருக்கி வாயிலாக எச்சரித்தல் போன்ற நடவடிக்கைகள் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ராஜ்யசபாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வ மாக அளித்த பதில்:
ரயில் பாதைகளில் யானைகள் பலியாவதை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் செயல்படும் ஐ.டி.எஸ்., எனப்படும் ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு, வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரயில்வே பாதையில், 141 கி.மீ., துாரத்துக்கு செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முறை, விரைவில் நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில், 981 கி.மீ.,க்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, வனத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பு பாதை அருகே யானைகளின் நடமாட்டம் கண்டறியப்படும் போதெல்லாம், லோகோ பைலட்டுகள், நிலைய மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு, எச்சரிக்கை சிக்னலை வழங்கும் ஒலி உணர்திறன் தொழில்நுட்பமும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது, அதிக ஆபத்து மண்டலங்களில் விரைவான தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துகிறது.
இது மட்டுமின்றி ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அடிப்படையில், யானைகள் வருவதை முன்பே கணிக்கும் முறையும், சில வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

