ADDED : ஏப் 13, 2026 12:09 PM

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் மேற்கு தொகுதியில், ராமதாஸ் அணி சார்பாக போட்டியிடும், எம்.எல்.ஏ., அருளை ஆதரித்து, பள்ளப்பட்டியில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் புறப்பட்டார்.
அவரை, இரு தொண்டர்கள் கைத்தாங்கலாக அழைத்து சென்றனர். அப்போது, திடீரென ராமதாஸ் தடுமாறி மயக்கம் அடைந்தார். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ராமதாஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். குரங்குச்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
தற்போது அவர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, ராமதாஸ் உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
