பேச்சுக்கும் தயார்; போருக்கும் தயார்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் கெடு
பேச்சுக்கும் தயார்; போருக்கும் தயார்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் கெடு
ADDED : செப் 05, 2025 08:30 AM

மாஸ்கோ: ''பேச்சு வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள்; இல்லையென்றால், ஆயுத பலத்தை பயன்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவோம்,'' என, உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், தற்போதும் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளதாவது:
என்னுடைய அனுமானத்தின்படி, பொதுவான புரிதல் மேலோங்கினால், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுக்கு வாய்ப்பு உள்ளது. துாதரக உறவுகள் மூலமான தீர்வையே ரஷ்யா விரும்புகிறது.
அவ்வாறு இல்லாமல், ஆயுத பலத்தால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினாலும், ரஷ்யா அதற்கும் தயாராக இருக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. ஆனால், ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சமரச பேச்சு இருந்தபோதிலும், ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புடின் தன் பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார். அவற்றில் முக்கியமானவை, உக்ரைன் 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பில் சேரும் எண்ணத்தை கைவிட வேண்டும். டான்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யா முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உள்ளிட்டவற்றை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெலன்ஸ்கியை மாஸ்கோவில் மட்டுமே சந்திக்க வாய்ப்புள்ளதாக ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்துள்ள கருத்தை, உக்ரைன் ஏற்க மறுத்துவிட்டது. மாறாக, பேச்சு நடத்துவதற்கான இடமாக பல நடுநிலை நாடுகளை உக்ரைன் முன்மொழிந்துள்ளது. மேலும், இது குறித்து உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
புடினின் முன்மொழிவுகள் ஒரு நயவஞ்சகமான தந்திரம். ஏற்றுக்கொள்ள முடியாத மிரட்டல்கள். ரஷ்யா தன் ஆக்கிரமிப்பை தொடரும் வரையிலும், ஒரு நியாயமான தீர்வைக் காண உண்மையான விருப்பத்தைக் காட்டாத வரையிலும், அர்த்தமுள்ள அமைதிப் பேச்சு நடக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.